இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் 27 வரை 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவைப்படும் நிலையில், இந்த காயம் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மேலும் படிங்க: பிசிசிஐயின் ஆண்டு வருமானம் எவ்வளவு? அதில் IPL-இன் பங்கு எவ்வளவு தெரியுமா?
அர்ஷ்தீப் சிங் காயம்
இந்நிலையில், பெக்கென்ஹாம் மைதானத்தில் நடந்த பயிற்சி அமர்வின் போது அர்ஷ்தீப் சிங்கிற்கு இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் பந்தை தடுக்க முயன்றபோது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரயான் டென் டோஷேட் இந்த காயம் குறித்து பேசுகையில், “அர்ஷ்தீப் பந்து வீசும் போது காயம் ஏற்பட்டுள்ளது. இது வெறும் வெட்டுக்காயம் தான், ஆனால் அதன் தீவிரத்தைப் பார்க்க வேண்டும். மருத்துவக் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தையல் தேவையா இல்லையா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்” என்று கூறினார். 4வது டெஸ்டில் அர்ஷ்தீப் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜஸ்பிரிட் பும்ராவை விளையாட வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங்!
25 வயதான அர்ஷ்தீப் சிங், இந்த தொடரில் தனது முதல் டெஸ்ட் அழைப்பைப் பெற்றார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் கென்ட் அணிக்காக 2023-2024 சீசனில் 5 முதல் தர போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த அனுபவம் அவரை இங்கிலாந்து நிலைமைகளுக்கு ஏற்ற வீரராக மாற்றி உள்ளது. ஆனால், இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. அகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் பெஞ்சில் உள்ளார். தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அவரது முதல் டெஸ்ட் அறிமுகத்தை தாமதப்படுத்தலாம்.
இந்திய அணியின் பிற சவால்கள்
இந்த காயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பல சவால்களில் ஒன்று மட்டுமே. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், லார்ட்ஸ் போட்டியில் போது விரலில் காயமடைந்தார். அவர் அந்த போட்டியில் கீப்பிங் செய்யவில்லை, துருவ் ஜூரல் அந்தப் பொறுப்பை ஏற்றார். பந்தின் காயத்தின் தீவிரம் இன்னும் தெரியவில்லை என்பதால், அவர் மான்செஸ்டர் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. உதவி பயிற்சியாளர் டென் டோஷேட் கூறுகையில், “அவரது விரல்களை ஓய்வெடுக்க முயற்சிக்கிறோம், மான்செஸ்டரில் அவர் தயாராக இருப்பார் என நம்புகிறோம்” என்று கூறினார். மறுபுறம், இங்கிலாந்து அணியில் ஸ்பின்னர் ஷோயிப் பஷீர், விரலில் எலும்பு முறிவு காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
தொடரின் நிலைமை மற்றும் எதிர்பார்ப்புகள்
இந்தியா இதுவரை இந்த தொடரில் மூன்று போட்டிகளில் 1ல் வென்றுள்ளது, ஆனால் லார்ட்ஸ் தோல்வி அவர்களை அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, மீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா கடந்த 89 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றதில்லை என்பது கூடுதல் சவால் அர்ஷ்தீப்பின் காயம் அணியின் பந்து வீச்சு வரிசையை பாதித்தாலும், பும்ரா மற்றும் சிராஜ் போன்றவர்களின் அனுபவம் அணிக்கு உறுதுணையாக இருக்கும். ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர்களும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
மேலும் படிங்க: தோனி அணிந்த ‘PIANO KEYS’ சட்டை.. இவ்வளவு விலையா? அப்படி என்ன ஸ்பெஷலா இருக்கு?