வாஷிங்டன் வேண்டாம்… குல்தீப் யாதவ் விளையாட 3 முக்கிய காரணம் – இந்தியாவுக்கு வெற்றி உறுதி!

India vs England: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் (Old Trafford Test) நடைபெறும் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டி எனலாம். 

சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி (Team India) சிறப்பாக விளையாடி வந்தாலும் கூட பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மீதம் உள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2007ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது எனலாம்.

India vs England: இந்தியா பேட்டிங்கின் பலம், பலவீனம் 

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் சுப்மான் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், மூத்த வீரர்களான ரவீந்திரே ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வந்தாலும் இத்தொடரில் ஒரு சதத்தை தவிர பெரிய ஸ்கோரை அவர் அடிக்கவில்லை. முதல் போட்டியில் நம்பர் 3இல் இறங்கிய சாய்  சுதர்சன், நம்பர் 5 மற்றும் நம்பர் 3இல் இறங்கிய கருண் நாயர், தான் விளையாடிய ஒவ்வொரு இன்னிங்ஸிலும் வெவ்வேறு இடங்களில் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இன்னும் பேட்டிங்கில் தங்களை நிரூபிக்கவில்லை.

India vs England: வாஷிங்டன் வெளியே, குல்தீப் யாதவ் உள்ளே

மாறாக பந்துவீச்சை பொருத்தவரை சுழற்பந்துவீச்சில் ஆல்-ரவுண்டர்கள் மட்டுமே உள்ளனர். பிரீமியம் சுழற்பந்துவீச்சாளரை இறக்கவே இல்லை. இங்கிலாந்து அணியோ ஷோயப் பஷீரை 3 போட்டிகளிலும் விளையாட வைத்து, அதிக ஓவர்களை வீச வைத்தது. அந்த வகையில் தற்போது 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன், மற்றொரு பிரீமியம் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆனாலும் 3 ஸ்பின்னர்கள் அணிக்கு தேவையில்லை என்பதால் இந்திய அணி வாஷிங்டனை நீக்கவிட்டு குல்தீப் யாதவுக்கு (Kuldeep Yadav) வாய்ப்பளிக்க வேண்டும். ஏன் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்பதற்கான 3 காரணங்களை இங்கு காணலாம்.

India vs England: ஆடுகளத்தின் தன்மை

வரலாற்றை திருப்பிப் பார்த்தால், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு எடுபட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பவுன்ஸ் இருக்கும் நன்றாலும், 4வது நாளில் ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தொடங்கும். அந்த நேரத்தில், விரல் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரை (Washington Sundar) விட மணிக்கட்டு ஸ்பின்னர் குல்தீப் யாதவ் மிகவும் கைக்கொடுப்பார். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் பந்து நன்கு திரும்பும் என்பதால் குல்தீப்பை கண்டிப்பாக எடுக்கலாம். வாஷிங்டனும் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவர் அதிக ரன்களை கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, நல்ல பவுன்ஸ் செய்து, பந்தை திருப்பும் திறன் கொண்ட குல்தீப் யாதவ் விளையாடியே ஆக வேண்டும். 

India vs England: இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங்

தட்டையான ஆடுகளங்களில் இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறைக்கு, அதாவது அதிரடி பேட்டிங்கிற்கு குல்தீப் யாதவ் தான் சரியான ஆள். ஒரு பக்கம் குல்தீப் யாதவ் ரன்களை கொடுக்காமல் பந்துவீசும்பட்சத்தில் இங்கிலாந்து மறுமுனையில் வீசும் பௌலரை அட்டாக் செய்ய முனைப்பு காட்டுவார்கள். அப்போது அதிக தவறான ஷாட்களை இங்கிலாந்து பேட்டர்கள் விளையாடுவார்கள். இதனால் விக்கெட்டுக்கான வாய்ப்பும் அதிகம் ஏற்படும். இது இந்தியாவுக்கு சாதகமாகும். 

India vs England: காம்பினேஷனில் பேலன்ஸ்

இங்கிலாந்து அணி (Team England) மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு பிரீமியம் சுழற்பந்துவீச்சாளர், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் உடன் விளையாடுகிறது. இதில் கிறிஸ் வோக்ஸை ஆல்-ரவுண்டர் என கூறுவது கடினம். அவர்களின் டெயிலெண்டர்கள் பேட்டிங் செய்வார்கள் என்றாலும் அவர்களால் தொடர்ச்சியாக அதை செய்ய முடியாது. அப்படி பார்த்தால் இங்கிலாந்தின் பேட்டிங் 7வது இடத்தோடு முடிந்துவிடுகிறது. கீழ் வரிசை பேட்டர்களின் பங்களிப்பால் போனஸ் ரன்களை இங்கிலாந்து பெறுகிறது. இந்த போனஸ் ரன்களை கட்டுப்படுத்தவும், கீழ் வரிசை பார்ட்னர்ஷிப்பை உடைக்கவும் குல்தீப் யாதவ் உதவுவார்.

குல்தீப்பை சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் காம்பினேஷனும் பேலன்ஸ் ஆகும். ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், ஒரு பிரீமியர் ஸ்பின்னர், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் என 7 பேட்டர்கள், 6 பந்துவீச்சு ஆப்ஷன்களுடன் இந்தியா களமிறங்கலாம். 20 விக்கெட்டுகளையும விரைவாக சரிப்பதன் மூலம் இந்தியா வெற்றி வாகை சூடலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.