4-வது டெஸ்ட்: பும்ரா இல்லாமலேயே இந்திய அணி வெற்றி பெறலாம் – ஆஸி.முன்னாள் வீரர்

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மிக முக்கியான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது. ஏனெனில் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் மீதமுள்ள 2 போட்டிகளில் எந்த ஒன்றில் விளையாடுவார் என்பது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமலேயே இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். அதற்கு இந்த தொடரின் 2-வது போட்டியில் பும்ரா இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றதை உதாரணமாக கூறும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

“பும்ராவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். அவர் விளையாடுவாரா? இல்லையா? என்ற பேச்சுகள் இருக்கிறது. சமீபத்தில் அவர் இல்லாமல் இந்தியா ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கு முக்கியமானது தனிப்பட்ட திறமை அல்ல, கூட்டு செயல்திறன். ஒவ்வொரு வீரரும் தங்கள் வேலையைச் செய்யும்போது அணிகள் வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு வீரரும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும், இருப்பதை கேப்டன் உறுதிசெய்வதுதான் வெற்றிக்கான சூத்திரம். எனவே பும்ரா இல்லாமலும் இந்திய அணி வெற்றி பெறலாம்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.