“பாஜகவுடன் எந்தக் காலத்திலும் தவெக கூட்டணி அமைக்காது” – ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்

சேலம்: “தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி திமுக. கொள்கை எதிரி பாஜக. எந்தக் காலத்திலும் பாஜக உடன் தவெக கூட்டணி அமைக்காது” என்று தவெக தேர்தல் மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், பெரியார் , காமராஜர், அம்பேத்கர் என தவெக கொள்கை தலைவர்கள் குறித்து கொள்கைகளை கட்சியின் கொள்கை பரப்பு மாநில இணைச் செயலாளர்கள் விளக்கிப் பேசினர்.

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து பேசுகையில், “தவெக கொள்கை விளக்க பொது கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். 12,500 கிராமங்களிலும் கூட்டம் நடத்தப்படும். தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வராக 2026-ல் அமர்வது நிச்சயம்” என்றார்

தவெக முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். | படம்: எஸ். குரு பிரசாத்

தேர்தல் மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது: “பேசி வளர்ந்த திமுக கட்சியில் பேச ஆளில்லை. அதனால் ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். பெரியார், அண்ணாவின் கொள்கைகளை திமுக என்றைக்கோ விட்டுவிட்டது. திமுகவின் கொள்ளை அரசியலை எதிர்த்து எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.

அதே குடும்ப ஆட்சியை எதிர்த்து அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தார். ‘மோடியா லேடியா’ என முழங்கி, பாஜகவை ஜெயலலிதா எதிர்த்து வந்தார். அதே வழியில் தான் திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் தவெக எதிர்த்து வருகிறது. திமுகவின் ஊழல்களால் பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.

திமுகவை எதிர்க்கும் தவெக, அதிமுகவை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, சாதாரண குடிமகனாக இருந்த விஜய், பாஜகவுக்கு ஆதரவாக இருந்த அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு, நீட் போராட்டம் என ஒரு சாதாரண குடிமகனாக அதிமுக ஆட்சியை எதிர்த்து வந்தார் .

திமுகவின் கொள்ளை ஆட்சியை எதிர்த்த எம்ஜிஆர், பாஜகவை எதிர்த்த ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளோடு தவெக செயல்பட்டு வருவதால், அதிமுக தொண்டர்கள் என்றைக்கோ, திமுகவில் சேர்ந்துவிட்டனர்.

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா | படம்: எஸ். குரு பிரசாத்

குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம்… பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. சமூக நீதியை வலியுறுத்தி சேலத்தில்தான் பெரியார் உள்ளிட்டோர் நீதி கட்சியை தொடங்கினர். அதே மதவெறி எதிர்ப்பு, சமூக நீதி கொள்கைகளோடுதான் தவெக இருக்கிறது என்பதை உணர்த்தவே சேலத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தை முதன் முதலாக நடத்தியுள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.