பாட்னா,
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைகள் (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. இதில் இறந்தவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பீகாரில் நேற்று தொடங்கிய மழைக்கால சட்டசபை கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்தியா கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கருப்பு குர்தாக்கள் அணிந்து சபைக்கு வந்திருந்தனர். சபை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்று வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் சமீபத்தில் அரங்கேறிய வன்முறை குற்றங்கள் குறித்து முதல்-மந்திரி நிதிஷ்குமார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
“வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதால், வாக்காளர் பட்டியலில் தங்களுக்கு சாதகமான திருத்தங்களை செய்ய இருப்பதாக குற்றம் சாட்டிய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் மெஹபூப் ஆலம், ‘நாங்கள் இதை சபையில் இருந்து தெருத் தெருவாக மக்கள் கவனத்துக்கு கொண்டு சென்று போராடுவோம்” என்றார்.
இதனால் அவை கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதயதுல் முஸ்லிம் கட்சி எம்.எல்.ஏ. இந்தியா கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்ததுடன், வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சபையின் மையப்பகுதிக்குச் சென்றார். சபாநாயகர் அவரை இருக்கைக்கு திரும்பும்படி எச்சரித்தார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.