இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து தொடரில் தொடர்ச்சியான காயங்களை எதிர்கொண்டு வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இளம் ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி லிகமென்ட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அணியின் திட்டங்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் நடைபெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவைப்படும் நிலையில், இந்த காயம் பெரும் சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, நிதீஷ் அணியுடன் மான்செஸ்டர் சென்றிருந்தாலும், பயிற்சியில் பங்கேற்கவில்லை.
மேலும் படிங்க: கருண் நாயர், ஆகாஷ் தீப் கிடையாது… உள்ளே வரும் இந்த 2 வீரர்கள் – என்ன செய்யும் இந்தியா?
இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் தற்போது 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்திய அணி தனது உத்திகளை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்டுள்ளது. அர்ஷ்தீப் இடது கையில் வெட்டுக்காயம் அடைந்துள்ளார், ஆகாஷ் தீப் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நான்காவது டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இதனுடன், நிதீஷ் குமார் ரெட்டியின் விலகல் அணியின் ஆல்-ரவுண்டர் வலிமையை பாதிக்கும்.
நிதீஷ் குமார் ரெட்டியின் காயம்
ஆந்திராவைச் சேர்ந்த இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டி, இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். இந்த தொடரில் ரன்கள் அடிக்கவில்லை என்றாலும், தேவையான நேரத்தில் விக்கெட்களை எடுத்து கொடுத்து வருகிறார். ரஞ்சி டிராபியில் சிறப்பான செயல்திறன் காட்டிய அவர், ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தார். இந்நிலையில் இவரின் காயம் அணியின் பேலன்ஸை பாதிக்கும். அவரது இடத்தை நிரப்ப, அணி நிர்வாகம் மாற்று வீரர்களை கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதில் அன்ஷுல் கம்போஜ், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் வாய்ப்பு பெறலாம்.
இந்திய அணியின் காய சிக்கல்கள்
இந்தத் தொடரில் இந்திய அணி பல காய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் உடல் நிலை குறித்து கவலைகள் இருந்து வருகின்றன. இப்போது அர்ஷ்தீப், ஆகாஷ் தீப் மற்றும் நிதீஷ் ஆகியோரின் காயங்கள் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ளன. இது அணியின் ஒட்டுமொத்த மனநிலையை பாதிக்கிறது. ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா கடந்த 89 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வென்றதில்லை, இது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இந்த போட்டி வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான அணி, இந்த சவால்களை எதிர்கொள்ள உறுதியுடன் உள்ளது.
மேலும் படிங்க: தோனியின் இடத்தில் ரிங்கு சிங்? கேகேஆர் – சிஎஸ்கே இடையே ஒப்பந்தம்!