வேலூர்: காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. எதுவும் தெரியாமலேயே ஊர், ஊராக சென்று பேசி வருகிறார் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 1,336 பயனாளிகளுக்கு அரசு துறைகள் சார்பில் வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி உள்பட மொத்தம் ரூ.22 கோடியே 44 லட்சத்து 87 ஆயிரத்து 859 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 1,336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பின்னர் அவர் பேசும்போது, “காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 1,336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, குறிப்பாக 4 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இவ்வளவு பேருக்கு ஒரே நேரத்தில் பட்டா கொடுத்தது இப்போதுதான். கடந்த 1952-ம் ஆண்டில் இருந்து அன்னா ஜார்ஜ், வெங்கட்ராமன் என பல மாவட்ட ஆட்சியர்களை பார்த்துள்ளேன். ஆனால், இந்தளவுக்கு முனைப்பு எடுத்து இவ்வளவு பேருக்கு பட்டா வழங்கியிருப்பவர் தற்போதைய மாவட்ட ஆட்சியர்தான்.
ஒரு தொழிற்சாலையை கட்டித்தருவதை விட, வீடில்லாத ஏழைக்கு சொந்த வீட்டில் சென்று அமரும்போது ஏற்படும் உணர்வு பெரியது. இதற்காகவும், மாவட்ட ஆட்சியரை பாராட்டுகிறேன். காட்பாடி தொகுதியை பொறுத்தவரை 8,861 வீட்டுமனை பட்டாக்கள் தயார் நிலையில் உள்ளன. காட்பாடி தொகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும்.
காட்பாடியில் 7,061 பேருக்கு பிற பகுதிகளில் பட்டா வழங்கப்பட வேண்டும். அதற்கும் நானே வருவேன். எந்தவொரு நலத்திட்டத்தையும் தமிழக முதல்வர் அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவது அதிகாரிகள் கையில்தான் உள்ளது. அந்தந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் அதிகாரிகள்தான். எனவே, ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
இவ்விழாவில், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதாஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
‘கடை விரித்தும் யாரும் வரவில்லை’: நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் துரை முருகன் பேசும் போது, “திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் மத்திய அரசு காவிரி – கோதாவரி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி பேசியுள்ளார். காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பு குறித்து பழனிசாமிக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. உச்ச நீதிமன்றத்தின் காவிரி தீர்ப்புக்கு பிறகு இதன்நிலை என்ன என்பது குறித்தும் தெரியாது. அவ்வாறு எதுவும் தெரியாமலேயே ஊர், ஊராகச் சென்று பேசிக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி ‘பை… பை… ஸ்டாலின்’ என ஹேஷ்டேக் போட்டுள்ளார். அவர் அந்தளவுக்கு வந்து விட்டாரா என்பதுதான் கேள்வி. அதிமுக கூட்டணியில் இணைய சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். கடை விரித்த உடனே 4 பேர் வரத்தான் செய்வார்கள். கடையை விரித்து வைத்துக்கொண்டு யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது” என்றார்.