போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச்களில் எந்த பிரச்சினையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்

புதுடெல்லி: போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (FCS) இயங்கும் செயல்பாடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதியில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் பேரில், ஏர் இந்தியா நிறுவனம், அதன் போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இது தொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் வெளியான தகவல்களின்படி, “ஆய்வுகளின்போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், ஆய்வுகளைத் தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடித்தோம். இதுகுறித்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் ஏர் இந்தியா உறுதியாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இரண்டிலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனத்தில் 787 வகை விமானங்கள் 33-ம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் 737 வகை விமானங்கள் 75-ம் உள்ளன. முன்னதாக, அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த 15 பக்க முதற்கட்ட அறிக்கையில், என்ஜின்களுக்கு எரிபொருளை வழங்கும் சுவிட்ச்கள் புறப்பட்ட ஒரு நொடிக்குள் செயலிழந்து ‘ஆஃப்’ ஆனதே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.