சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டரை மணி நேரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் அழைத்து வரப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து, முதல்வரிடம் நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் இருந்தபடியே… முதல்வர் ஸ்டாலின், தனது அலுவலகப் பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பில், “முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலர் நா.முருகானந்தத்துடன், அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். கடந்த 21-ம் தேதி வரை இந்த திட்டத்தில் 5,74,614 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா என்பதைக் கேட்டறிந்த முதல்வர், திட்ட முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும், முகாம்களுக்கு வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துதர வேண்டும், மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் நலமாக இருக்கிறார். அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரை 3 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்” என்றார்.