IPL 2026: இந்த 4 வீரர்களுக்கு ஐபிஎல் மினி ஏலத்தில் ஜாக்பார்ட் தான்!

ஐபிஎல் 2025 சீசன் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. இதன் பிறகு, பல வெளிநாட்டு வீரர்கள் தேசிய கடமைகள் அல்லது தனிப்பட்ட காரணங்களால் தொடரில் இருந்து விலகினர். இந்நிலையில், 10 அணிகளுக்கும் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய பிசிசிஐ அனுமதி வழங்கியது. அப்படி அணிக்குள் வந்த சில வீரர்கள் 2025 சீசனில் சில போட்டிகளே விளையாடினாலும் சிறப்பாக செயல்பட்டனர். இவரை மீண்டும் தக்கவைக்க முடியாது என்பதால், 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தொகைக்கு வாங்கப்படலாம். அப்படி அதிக ஏலத்திற்கு போக கூடிய 4 வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஜானி பேர்ஸ்டோ (Johnny Bairstow)

இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, ஐபிஎல் வரலாற்றில் 52 போட்டிகளில் விளையாடி 1674 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 34.88 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 142.96 உடன், 2 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அறிமுகமாகி 2024 வரை பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் 2025ல் மும்பை அணியில் தற்காலிக மாற்று வீரராக இணைந்த அவர், அணிக்கு பேட்டிங்கில் வலுப்படுத்தினார். எனவே 2026 ஏலத்தில், அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறலாம்.

முஸ்தபிசூர் ரஹ்மான் (Mustafizur Rahman)

வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான், 2025ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 6 கோடி ரூபாய்க்கு தற்காலிக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது வங்கதேச வீரர்களுக்கான ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகை ஆகும். 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அறிமுகமாகிய அவர் 38 போட்டிகளில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2024ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் எடுத்தார். 2026 ஏலத்தில் அவர் 8-10 கோடி ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கப்படலாம். 

டெவால்ட் பிரெவிஸ் (Dewalt Brevis)

தென்னாப்பிரிக்க இளம் அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்காலிக மாற்று வீரராக இணைந்துள்ளார். அவரது அதிரடி பேட்டிங் ஸ்டைல், ஏபி டி வில்லியர்ஸை நினைவூட்டுகிறது என்று பலரும் கூறுகின்றனர். ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய அவரை மெகா ஏலத்தில் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் மாற்று வீரராக வந்து அதிரடி காட்டினார். அவரை சென்னை அணி விடுவிக்கும் பட்சத்தில் மினி ஏலத்தில் 5-7 கோடி ரூபாய் வரை ஏலம் பெற வாய்ப்புள்ளது.

நான்ட்ரே பர்கர் (Nantre Burger)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நான்ட்ரே பர்கர், தற்காலிக மாற்றாக இணைந்தார். அவரது வேகம் மற்றும் பந்தை ஸ்விங் செய்யும் திறன், அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தி உள்ளது. 2026 ஏலத்தில் 4-6 கோடி ரூபாய் தொகைக்கு வாங்கப்படலாம். பிசிசிஐ விதிகளின்படி, ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு பிறகு ஆரம்பித்தவுடன் வந்த வீரர்களை அணிகள் தக்க வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த ஆண்டு மினி ஏலம் சுவாரஸ்யமாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.