கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.50 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் பறிமுதல்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஐஏஎஸ் அதி​காரி உட்பட 8 அரசு அதி​காரி​களின் வீடு​களில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர். இதில் கணக்​கில் வராத ரூ.50 கோடி மதிப்பிலான ​ப‌ணம், தங்க நகைகள் மற்​றும் ஆவணங்கள் சிக்கின.

கர்​நாடக மாநிலத்​தில் அரசு பணி​யில் உள்ள முக்​கிய அரசு அதி​காரி​கள் ஊழலில் ஈடு​படு​வ​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் லோக் ஆயுக்தா போலீ​ஸார் நேற்று பெங்​களூரு, மங்​களூரு, மைசூரு, துமக்​கூரு, குடகு, கொப்​பல், பெல​காவி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 8 அரசு அதி​காரி​களுக்கு சொந்​த​மான 45 இடங்​களில் சோதனை நடத்தினர்.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்​தது. இந்த சோதனை​யில் 100-க்​கும் மேற்​பட்ட‌ போலீஸார் ஈடு​பட்​டனர். பெங்​களூரு நகர்ப்​புற ரயில்வே திட்​டத்​தின் சிறப்பு துணை ஆணை​யரும் ஐஏஎஸ் அதி​காரி​யு​மான வசந்தி அமருக்கு சொந்​த​மான ஆர்​.டி.நகர் வீட்​டில் சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது அவர் கடந்த ஆண்டு தாச​நாரயணபுரா பகு​தி​யில் 10.2 ஏக்​கர் நிலத்தை வாங்​கிய ஆவணம் சிக்​கியது.

இதுத​விர ரூ.12 லட்​சம் ரொக்​கம், 340 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த கைகடி​காரங்​கள், சொத்​துக்​களின் ஆவணங்​கள் உள்ளிட்​ட​வை​யும் சிக்​கின. இதையடுத்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் அவர் மீது வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துக் குவித்ததாக வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

குடகு மாவட்​டம் மடிக்​கேரி​யில் திறன் மேம்​பாட்டு தொழில்​முனை​வோர் மற்​றும் வாழ்​வா​தா​ரத் துறை​யின் இணை இயக்​குநர் மஞ்​சு​நாத​சாமி​யின் வீட்​டில் சோதனை நடத்​திய போது, கணக்​கில் வராத ரூ.16 லட்​சம் ரொக்​கம், 256 கிராம் தங்க நகைகள் சிக்கின. கொப்​பலில் மாவட்ட தொழில் மையத்​தின் உதவி இயக்​குநர் ஷேக் ஃபகத்​தின் வீட்​டில் சோதனை நடத்​திய போது 765 கிராம் தங்க நகைகள், ரூ.6 லட்​சம் ரொக்​கம், 16 விலை உயர்ந்த கைகடி​காரங்​கள், 330 அரிய நாண​யங்​கள் உள்​ளிட்​டவை சிக்​கின.

இதுத​விர பெங்​களூரு சககார் நகரில் உள்ள நகர மற்​றும் கிராமப்​புற திட்​டத் துறை​யின் உதவி இயக்​குநர் எரப்பா ரெட்​டி, மைசூரு மாநகர அலு​வலக உதவி​யாளர் வெங்​கட​ராம், துமக்​கூரு​வில் கே.ஐ.ஏ.டி.பி.​யின் உதவி நிர்​வாகப் பொறி​யாளர் ராஜேஷ் உள்​ளிட்​டோரின் வீடு​களில் நடத்​திய சோதனை​யில் ரொக்க பணமும், சொத்து ஆவணங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீ​ஸார் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘அரசு அதி​காரி​கள் 8 பேரின் வீடு​களில் நடத்​திய சோதனையில் ரூ.49.89 கோடி மதிப்​பிலான ரொக்​கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்​கள் சிக்​கி​யுள்​ளன. அந்த 8 அதி​காரி​கள் மீதும் பிஎன்​எஸ் சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.​

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.