பாங்காங்,
தாய்லாந்து-கம்போடியா ஆகிய நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதனால் இரு நாடுகள் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவுகிறது. அந்த பிரச்சினை தொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இரு நாடுகளும் தங்களது எல்லையை மூடுவதாக அறிவித்தன. இதற்கு பதிலடியாக தாய்லாந்தில் இருந்து காய்கறி, பழங்கள் இறக்குமதி மற்றும் அங்குள்ள திரைப்படங்களை திரையிட கம்போடியா அரசாங்கம் தடை விதித்தது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் சிக்கலான நிலை நீடித்தது. இதற்கு தீர்வு காண இருதரப்பு தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.எனவே தனது நாட்டில் உள்ள கம்போடியா தூதரை தாய்லாந்து வெளியேற்றியது.
மேலும் தன்னுடைய நாட்டின் தூதரையும் கம்போடியாவில் இருந்து வெளியேறுமாறு தாய்லாந்து அரசாங்கம் உத்தரவிட்டது.இதன் காரணமாக இரு நாடுகள் இடையேயான மோதல் மீண்டும் வெடித்தது. தாய்லாந்தின் சுரின், சிசா கெட் மற்றும் கம்போடியாவின் ஒடார் மீஞ்சே ஆகிய எல்லைப்புற மாகாணங்களில் உள்ள 6 நகரங்களுக்கு மோதல் பரவியது.
அப்போது இரு நாட்டு ராணுவமும் ராக்கெட் வெடிகுண்டு, பீரங்கி போன்றவற்றால் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இதில் சிசா கெட் மாகாணத்தில் உள்ள ஒரு பெட்ரோஸ் பங்க் மீது கம்போடியா ராணுவம் தாக்குதல் நடத்தியது.இதனால் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் பங்க் வெடித்துச் சிதறியது. இதில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதேபோல் மற்ற இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் மேலும் 5 பேர் பலியாகினர். எனவே எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. இதனால் அங்குள்ள பதுங்கு குழிகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். இந்த மோதலால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில், தாய்லாந்து சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கம்போடியாவுடன் சண்டை நிறுத்தம் செய்துகொள்ள மூன்றாம் தரப்பு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாமெனவும் தயார் நிலையில் இருக்கவும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கேட்டு நடந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.