கராச்சி,
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் கோத்கி நகரில் வசித்து வந்தவர் சுமீரா ராஜ்புத். டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்த இவரை 58 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், அவருடைய வீட்டில் உயிரிழந்த நிலையில், அவர் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய மர்ம மரணம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவருடைய 15 வயது மகள் கூறும்போது, அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள சில தனிநபர்கள் வற்புறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதுபற்றி நடந்த விசாரணையில், சந்தேகத்திற்குரிய 2 பேர் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அவருடைய உடல் பிரேத பரிசோதனையில், சுமீராவை உடல் ரீதியாக துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி மாவட்ட காவல் அதிகாரி அன்வர் ஷேக் கூறும்போது, சுமீராவை கொலை செய்ததற்கான உள்நோக்கம் என்னவென்று தெரிய வரவில்லை. எப்.ஐ.ஆர். எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சந்தேகத்திற்குரிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டதற்கான காயங்கள் எதுவும் காணப்படவில்லை. இதனால், அவருடைய மகள் கூறியதுபோன்று, விஷ மாத்திரைகளை கொடுத்து அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அந்த கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றார்.
அந்நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில், சனா யூசப் (வயது 17) என்ற டிக்டாக் பிரபலம் அவருடைய வீட்டில் இருந்தபோது, மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டார்.
அவரை, டிக்டாக்கில் 7.4 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். சம்பவம் நடந்து 20 மணிநேரத்தில், பைசலாபாத் நகரில் வைத்து, காகா என்ற உமர் ஹயாத் என்ற 22 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். எனினும், அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மற்றொரு டிக்டாக் பிரபலம் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதனால், பெண்கள் அதிலும் சமூக ஊடகங்களில் பிரபலம் வாய்ந்தவராக இருப்பவர்கள் வன்முறைக்கு உயிரிழப்பது அந்நாட்டில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.