லீட்ஸ்,
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி லீட்சில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் – ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஏபி டி வில்லியர்ஸ் 123 ரன்களும், ஸ்மட்ஸ் 85 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சிடில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ஆல் ரவுண்டர் பென் கட்டிங் 59 ரன்கள் (29 பந்துகள்) அடித்து போராடியும் பலனில்லை. வெறும் 16.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பங்கிசோ 4 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளும், வெய்ன் பார்னெல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஏபி டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.