மான்செஸ்டர்,
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.
பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 228 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் ஓடவிட்டனர். ரவீந்திர ஜடேஜா, ஹாரி புரூக் பந்து வீச்சில் சிக்சர் தூக்கி தனது 5-வது சதத்தை கடந்தார். முதல் பந்திலேயே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிப் பிழைத்ததால் கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார். இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 3-வது சதம் இதுவாகும்.
அடுத்த ஒரு ஓவர் கழித்து வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை எட்டினார். அத்துடன் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது இந்திய அணி 2-வது இன்னிங்சில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும் (206 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் (185 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சதம் அடித்ததுடன் 6 விக்கெட்டும் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.கடைசி நாளில் இந்திய அணியை சுருட்டி வெற்றியை ருசித்துவிடலாம் என்ற இங்கிலாந்து அணியின் கனவை இந்திய பேட்ஸ்மேன்கள் தவிடுபொடியாக்கினர்.