இந்து கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் நிகழ்வாக, இந்துக்கள் கோயில் கட்ட நிலத்தை தானமாக இஸ்லாமியர்கள் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் அலிநகர் உள்ளது. அங்கு தப்ரி கிராமத்தில் உள்ள சக்லைன் ஹைதர் என்ற இஸ்லாமியர் தம் உறவினரான அக்தர் அன்சாரிக்கு 1,364 சதுர அடி நிலத்தை தானமாக அளித்தார். இதில் அக்தர் தனக்காக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது பழமையான சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது. இந்தச் செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஏராளமானோர் அந்த இடத்தில் கூடினர். சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் தற்காலிகமாக அருகிலுள்ள ஒரு கோவியில் வைக்கப்பட்டது. சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஒரு பிரமாண்டமான கோயில் கட்டப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை சக்லைன் ஹைதரும், அக்தர் அன்சாரியின் குடும்பத்தினரும் உடனடியாக ஏற்றனர். சிவன் கோயில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்தனர்.

இது குறித்து தப்ரிவாசியான சக்லைன் ஹைதர் கூறுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக அனைத்து சமூகத்தினருடனும் சேர்ந்து ஒன்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு பண்டிகையையும் மத வேற்றுமையின்றி கொண்டாடி வருகிறோம். எனவே, பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் உணர்வை மதிக்கும் வகையில், எங்கள் நிலத்தை தானமாக அளிக்க முடிவு எடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

வடமாநிலத்தில் தற்போது இந்து காலண்டரில் சிவனுக்கான சாவன் மாதத்தின் இன்று மூன்றாவது திங்கட்கிழமை என்பதால், கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு கிராம வாசிகள் அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து, அந்த இடத்தில் சிவனுக்கான வழிபாடு, ஜலாபிஷேகம் செய்யப்பட்டது. இந்தத் தகவல் அறிந்த அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவனை வழிபட்டனர்.

இந்நிலையில், பக்தர்கள் வருகையையொட்டி, சந்தவுலி மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படைகளை நிறுத்தியுள்ளது. மேலும், நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அந்தத் தொகுதி எம்எல்ஏ நீரஜ் திரிபாதி மற்றும் பிற தலைவர்கள் சக்லைன் ஹைதரை நேரில் சந்தித்துப் பாராட்டினர். இந்தச் செயல் இந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாகக் கருதுகின்றனர். சக்லைன் ஹைதர் மற்றும் அன்சாரியின் இந்த நடவடிக்கை சமூக நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.