சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டுகள் முழுமையாகப் படியெடுக்கப்பட்டு தனியே நூலாக வெளியிடப்படுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை விசிக எம்.பி. துரை.ரவிக்குமார் மக்களவையில் எழுப்பியிருந்தார்.
இவற்றுக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதில்கள்: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கல்வெட்டுப் பிரிவு, சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகளைப் பிரதி எடுத்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் முதலாம் ராஜேந்திர சோழன் (1036 CE) ஆட்சிக் காலம் முதல் பல்வேறு காலங்களைச் சேர்ந்தவை.
இந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் படியெடுக்கப்பட்டு, அவற்றின் சாராம்சம் 1888 முதல் 1963 வரையிலான இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 157 கல்வெட்டுகளின் முழுமையான பாடங்கள் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இவை அனைத்து ஏஎஸ்ஐ வெளியீடுகளும் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கல்வெட்டுப் பிரிவு ஆகியவற்றில் உள்ள வெவ்வேறு விற்பனை விற்பனை மையங்களில் கிடைக்கின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த பதிலை சுட்டிக்காட்டி துரை.ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டுகள் இன்னும்கூட முழுமையாகப் படியெடுக்கப்படவில்லை. படியெடுக்கப்பட்டவையும் கூட முழுமையாகப் பிரசுரிக்கப்படவில்லை. சோழர், பாண்டியர், விஜயநகர ஆட்சிக்காலம் என நீண்ட வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் கல்வெட்டுகள் அங்கு உள்ளன. தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமின்றி சமஸ்கிருத கல்வெட்டுகளும் உள்ளன.
நடராஜர் கோயில் வரலாற்றையும் கடந்த ஆயிரம் ஆண்டுகால தமிழகத்தின் வரலாற்றையும் புரிந்து கொள்ள இந்தக் கல்வெட்டுகள் இன்றியமையாதவையாகும். மத்திய கலாச்சார அமைச்சரின் பதிலைப் பார்க்கும்போது மத்திய அரசு இந்தப் பணியை முன்னெடுக்கத் தயாராக இல்லை எனப் புரிகிறது. எனவே, தமிழக அரசின் கல்வெட்டியல் துறை சார்பில் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.