மும்பை,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
இதில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. அதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.
311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த போட்டி டிராவில் முடிவதற்கு 5 ஓவருக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் ஆட்டத்தை டிராவில் முடிக்க முன்வந்தனர். ஆனால் இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கும் வாய்ப்புக்காக டிராவை தள்ளி போட்டனர். இதனால் இரு அணியினருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இது பலரது மத்தியில் பேசு பொருளானது.
முன்னதாக இந்திய அணி இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கணித்திருந்தார். அந்த சூழலில் 4-வது போட்டி தற்போது டிராவில் முடிவடைந்துள்ளதால் கடைசி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே வாகனின் கணிப்பு நிறைவேறும். ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ அவரது கணிப்பு தவறாகி விடும்.
இந்நிலையில் மைக்கேல் வாகனை இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் எக்ஸ் பக்கத்தில் வம்பிழுத்துள்ளார். அதில் 4-வது டெஸ்ட் முடிந்ததும் வாசிம் ஜாபர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஹாய் மைக்கேல், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டார்.
அதற்கு பதிலளித்த மைக்கேல் வாகன், “மாலை வணக்கம் வாசிம்.. ஓவலில் (5-வது போட்டி) சந்திப்போம்.. இப்போதும் என்னுடைய கணிப்பு (3-1) நன்றாக இருக்கிறது” என்று பதில் கொடுத்தார்.
மைக்கேல் வாகனின் இந்த பதிவிற்கு ஜாபர், “3-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவீர்களா அல்லது ஸ்டோக்சைப் போல நீங்களும் ஓவல் டெஸ்ட் முடிவதற்குள் கைகுலுக்கத் தயாராக இருக்கிறீர்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும், மைக்கேல்” என்று கிண்டலாக பதிலளித்தார்.