ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று (ஜூலை 27) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற வில்லியனூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் மாஹே பேட்டிங் புகுந்தது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள அஜய் ரொஹேரா 17 (12) ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அஹில் கச்ரு 22 (18) ரன் அவுட் ஆனார்.
அவர்களை தொடர்ந்து ராகவன் ராமமூர்த்தி 25 (19), சோபித் சவுத்ரி 1 (1) என அடுத்தடுத்து வெளியேற, மாஹே அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து, நிதானமாக ஆடிய கமலீஷ்வரன் 20 (27) ரமேஷ் குமார் பந்துவீச்சில் அவுட்டானார். தாமதமாக பேட்டிங் செய்ய களத்திற்கு வந்ததால் சபே சதா, டைம் அவுட் முறையில் வெளியேறினார்.
ஸ்ரீகரண் 32 (27) ரன்கள் எடுத்து வெளியேற 20 ஓவர்கள் முடிவில் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. வில்லியனூர் அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரமேஷ் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வில்லியனூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பானு ஆனந்த் மற்றும் மொஹித் காலே இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து மொஹித் காலே 20 பந்துகளில் (5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) 35 ரன்களிலும், பானு ஆனந்த் 28 பந்துகளில் (2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) 35 ரன்களிலும் வெளியேறினர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆகாஷ் மற்றும் அமன் கான் இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அமன் கான் 17 (10) ரன்களில் வெளியேறினார். இறுதியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. கடைசிவரை களத்தில் இருந்த வில்லியனூர் அணி வீரர் ஆகாஷ் 39 (27) ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். இதுகுறித்து கூறிய வில்லியனூர் அணியின் கேப்டன் ரோஹித் தாமேதரன் கூறுகையில், “இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது மறக்க முடியாத நிகழ்வாகும். எங்களது அணியின் பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றிக் கோப்பையை பாண்டிச்சேரி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சமர்பிக்கிறேன்” என்றார்.
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் 2-வின் முக்கிய விவரங்கள்
ஆரஞ்ச் கேப் : வேதாந்த் பரத்வாஜ் (அதிக ரன்கள்)
பர்ப்பிள் கேப் : அஸ்வின் தாஸ் (அதிக விக்கெட்டுகள்)
அதிக ரன்கள் : வேதாந்த் பரத்வாஜ் (620 ரன்கள்)
அதிக சிக்ஸர்கள் : அஜய் ரொஹேரா (31)
அதிக பவுண்டரிகள் : அஜய் ரொஹேரா (65)
தனிநபர் அதிகபட்சம் : அஜய் ரொஹேரா (114)
அதிவேக சதம் : அஜய் ரொஹேரா (48 பந்துகள்)
அதிவேக அரைசதம் : ஆதித்யா கர்வால் (15 பந்துகள்)
அதிக ஸ்ர்டைக் ரேட் – அஜய் ரொஹேரா (169.5)
அதிகப்பட்ச பார்ட்னர்ஷிப் : பானு ஆனந்த் மற்றும் அமன் கான் (142)
அதிக விக்கெட்டுகள் : அஸ்வின் தாஸ் (21)
இன்னிங்ஸ் சிறந்த பந்துவீச்சு : பிரதீப் ஜாஹர் (5/25)
சிறந்த எகானமி : சாத்விக் தேஷ்வால் (5.90)
மேலும் படிங்க: CSK: சாம் கரனை விடுவித்து.. இந்த 3 பவுலருக்கு குறிவைக்கும் சிஎஸ்கே!
மேலும் படிங்க: Gautam Gambhir: பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கம்பீர் நீக்கம்? புதிய கோச் இவரா..