புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அதேவேளை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து இன்று முதல் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்தியஅரசு தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவையில் இதுபற்றி விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கிவைத்தார்.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இதுபற்றி தொடர்ந்து அவையில் பேசி வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி அவையில் விளக்கம் அளிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை மக்களவையில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.