மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 (4வது போட்டி டிரா) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
முன்னதாக ராகுல் டிராவிட்டுக்குப்பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதும் கம்பீருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அதில் அவருக்கு தேவையான உதவி பயிற்சியாளர்களை அவரே தேர்வு செய்து கொள்ள பி.சி.சி.ஐ. அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கலையும், உதவி பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட்டையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
கம்பீர் தலைமையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது.
இதன் காரணமாக கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழு பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு துறையிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்களை பி.சி.சி.ஐ. செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரை நீக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தலைமை பயிற்சியாளராக கம்பீரே தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.