உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். அவர்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை 140 கோடி இந்தியர்களும் கொண்டாடுகின்றனர். இது இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன.

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்து வருகிறது. இந்த மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என்பது ஆபரேஷன் சிந்தூரின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கையின் போது இந்தியாவின் ராணுவ வலிமை, தொழில்நுட்பத் திறனை பார்த்து ஒட்டு மொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்தது. குறிப்பாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானை துவம்சம் செய்தன. அந்த நாட்டின் விமானபடைத் தளங்கள் இன்றும் செயல்படவில்லை. அவை இன்னமும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளன.

இதற்கு முன்பு இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு தீவிரவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. தீவிரவாதிகள் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், அவர்கள் வேட்டையாடப்படுவார்கள்.

ஐ.நா. சபையில் மொத்தமுள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தது. ஆனால் காங்கிரஸ் மட்டும் தாய்நாட்டுக்கு ஆதரவு அளிக்கவில்லை. நமது ராணுவத்துக்கு ஆதரவாகவும் அந்த கட்சி செயல்படவில்லை. பஹல்காம் தாக்குதலில் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சி செய்தது. நமது வீரர்களின் மன உறுதியை குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டது. சிலர் பாகிஸ்தானின் ஊதுகுழலாக மாறினர்.

இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பணிந்தது. போரை நிறுத்த கோரி மன்றாடியதால், மே 10-ம் தேதி போர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

போரின்போது இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. வேறுவழியின்றி பாகிஸ்தான் மண்டியிட்டது.

பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ, இந்திய ராணுவ டிஜிஎம்ஓவை தொடர்புகொண்டு, இனிமேலும் எங்களால் போரிட முடியாது. போரை நிறுத்தி கொள்ளுங்கள் என்று மன்றாடினார். நமது நோக்கம் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை அழிப்பது மட்டுமே. அந்த நோக்கம் 100 சதவீதம் நிறைவேறிவிட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவரோ, எந்த நாடோ அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்களின் அழுத்தத்தால் போர் நிறுத்தப்படவில்லை.

கடந்த மே 9-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், என்னை தொடர்பு கொள்ள ஒரு மணி நேரம் முயற்சி செய்தார். பின்னர் நான் அவரோடு பேசினேன். அப்போது அவர் கூறும்போது, ‘பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது’ என்றார்.

அவரிடம் மிகவும் தெளிவாக கூறினேன். ‘பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கான பெரும் விலையை கொடுக்க நேரிடும். அவர்கள் துப்பாக்கியால் சுட்டால், நாங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசுவோம்’ என்று அமெரிக்க துணை அதிபரிடம் தெளிவுபடுத்தினேன். இதன் பிறகு பாகிஸ்தானின் ராணுவ பலம் முழுமையாக அழிக்கப்பட்டது. இந்தியா முன்பைவிட மிகவும் வலுவாக இருக்கிறது என்பதும், எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சினை எழுந்தால், இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்பதும் பாகிஸ்தானுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும்.

இந்திய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாகும். இங்கிருந்து மீண்டும் கூறுகிறேன். ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் அத்துமீறினால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடங்கப்படும். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

சுயசார்புக் கொள்கையின் அடிப்படையில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை சார்ந்து செயல்பட்டு வருகிறது. அது தொடர்ச்சியாக வதந்திகளைப் பரப்புகிறது. காங்கிரஸும், அதன் தலைவர்களும் பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர்களைபோல பேசுகின்றனர். இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தினால், காங்கிரஸ் கட்சி அதற்கு ஆதாரம் கேட்கிறது.

ஆபரேஷன் சிந்தூரின்போது பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அப்போதும் சிலர் எதிர்மறையாக கருத்துகளைப் பதிவிட்டனர். ஆனால் அந்த வீரர் பத்திரமாக நாடு திரும்பினார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் அழுது கொண்டிருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து இந்தியாவில் சிலரும் அழுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முடியவில்லையே என்று அவர்கள் மிகவும் வருந்துகின்றனர்.

தற்போது அவர்களுக்கு திடீரென வீரம் வந்துவிட்டது. ஆபரேஷன் சிந்தூரை ஏன் நிறுத்தினீர்கள் என்று அவையில் கேள்வி எழுப்புகின்றனர். ஒட்டுமொத்த நாடும் உங்களைப் பார்த்து சிரிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கச்சத் தீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களுக்கு துரோகம்: சீனாவுடனான போரின்போது 38,000 சதுர கி.மீ. நிலத்தை இந்தியா இழந்தது. கடந்த 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின்போது காஷ்மீரின் ஹாஜி பிர் பாஸ் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றியது. ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் அந்த பகுதியை மீண்டும் பாகிஸ்தானுக்கே தாரைவார்த்தனர்.

கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது 93,000 பாகிஸ்தான் வீரர்களை இந்திய ராணுவம் சிறைபிடித்தது. இதை பயன்படுத்தி ஏராளமான விஷயங்களை சாதித்து இருக்க முடியும். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அருமையான வாய்ப்பை தவறவிட்டனர். கடந்த 1974-ம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டது.

மும்பை தாக்குதலின்போதும் அன்றைய ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பாகிஸ்தான் தூதரகத்தில் ஓர் அதிகாரிகூட வெளியேற்றப்படவில்லை. சில வாரங்களிலேயே பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அந்த நாட்டுக்கு மிகவும் விரும்பப்படும் நாடு அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் நேருவே கையெழுத்திட்டார். இந்த பிரச்சினையில் உலக வங்கி தலையிடவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி சிந்து நதிகளின் மொத்த நீரில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. 20 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தது.

இதன் காரணமாக காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். நேருவின் மிகப்பெரிய தவறுகளில் சிந்து நதி ஒப்பந்தமும் ஒன்றாகும்.

எல்லாவற்றையும் தாரை வார்த்து, பல்வேறு விவகாரங்களில் தோல்வி அடைந்த காங்கிரஸ், இப்போது ராஜதந்திரம் குறித்து நமக்கு பாடம் நடத்துகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.