திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.
சத்தீஷ்கார் மாநிலம் தூர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், அங்குள்ள நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர். அதாவது 18, 19 வயது மதிக்கத்தக்க 3 இளம்பெண்களை சுக்மான் மண்டாவி என்பவர் கன்னியாஸ்திரியிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக போலீசார் ஆள் கடத்தல், மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் 3 இளம் பெண்களையும், கேரளாவில் உள்ள கிறிஸ்தவ சபையின் கீழ் செயல்படும் மருத்துவமனை மற்றும் அலுவலகத்தில் வேலைக்கு அழைத்து வர 2 கன்னியாஸ்திரிகளும் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் 3 இளம்பெண்களின் பெற்றோரிடமும் ஒப்புதலும் பெற்றதாக தெரிகிறது. எனவே இது தொடர்பாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது.
இதற்கிடையே கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும், பிரதமரும், உள்துறை மந்திரியும் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்திந்திய பேராயர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மேலும் கேரளாவில் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டமும் நடந்தது.
எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவசர கடிதமும் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் கேரள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் கிளிம்மீஸ் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கேரள கன்னியாஸ்திரிகள் சத்தீஷ்காரில் கைதான சம்பவம் கிறிஸ்தவ திருச்சபைக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது சிறுபான்மையினரை இழிவாக நடத்தும் செயல். மத சுதந்திரத்திற்கு எதிரானதும், நாட்டின் அரசியல் அமைப்பிற்கு எதிராக விடுக்கப்பட்ட சவால் ஆகும்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்கவும், மத சிறுபான்மையினருக்கு சுதந்திரம் கிடைக்க பிரதமரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். மற்ற மாநிலங்களிலும் இது போன்ற சூழல் நிலவி வருகிறது. தற்போது பா.ஜனதா செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை” என்று அவர் கூறினார்.