மான்செஸ்டர்,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இப்போதும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ரிஷப் பண்டை பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.
இருப்பினும் அவரால் இங்கிலாந்துக்கு 5 -வது போட்டியில் விளையாட முடியாது. அதன் காரணமாக அந்த போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு கிடைத்த அன்பையும், வாழ்த்துகளையும் நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு உண்மையான பலத்தை அளித்துள்ளது. தற்போது எனது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்காக ஓய்வில் இருக்கிறேன். என்னுடைய காயம் குணமடைந்து வருகிறது. இருந்தாலும் பொறுமையுடன் இருந்து முழு உடற்தகுதி பெறும் வரை காத்திருப்பேன். நாட்டிற்காக விளையாடுவது எப்போதும் என் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணமாகும். மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.