“வீணாக கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு நீர்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?'' – ஆர்.பி உதயகுமார்

“முல்லைப் பெரியாறு அணையின் நீர் வீணாக கேரளக் கடலில் கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப்பெரியாறு நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இது தவிர ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

1979 ஆம் ஆண்டு அணை பலம் இழந்து விட்டதாக கேரளா தரப்பில் புகார் கூறியதை தொடர்ந்து, 152 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், 136 அடியாக குறைக்கப்பட்து. இதனால் தேனி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒருபோக விவசாயம் கூட முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டதை நாம் அறிவோம், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு பெரியாறு தண்ணீர் செல்வதில்லை.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்தலாம் எனவும் தொடர் சட்ட போராட்டத்தை தொடர்ந்து 2014-ல் உச்ச நீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதா பெற்றுத் தந்தார். இதற்காக விவசாயிகள் மதுரையில் நன்றி தெரிவித்து மாநாடு நடத்தினார்கள்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தேங்கும் தண்ணீர் முழுவதுமாக தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என 1986 இல் அமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து 2014 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது ‘ரூல்கர்வ்’ என்கின்ற நடைமுறையின் காரணத்தினால் ஒரு ஆண்டியின் நிலவும் வெவ்வேறு பருவ கால சூழலுக்கு ஏற்ப முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பையை கருத்தில் கொண்டு அந்த அணையில் எத்தனை அடி உயரத்துக்கு நீரை தேக்க வேண்டும் என்பதை நியமிப்போம் என்ற அறிவியல் தொழில்நுட்ப முறை மூலம் ஒவ்வொரு மாதத்திற்கான நீர்த்தேக்கும் அளவு, மத்திய நீர்வள கமிஷனால் நிர்ணயிக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை

‘ரூல்கர்வ்’ நடைமுறையை மாற்ற தொடர்ந்து இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை நீர் கேரள கடலுக்கு வீணாக செல்வதை தடுக்க முடியாமல் உள்ளது.

கடந்து பத்து நாள்களுக்கு மேலாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழையால் நீர்மட்டம் மீண்டும் வெகுவாக உயர்ந்து வந்தபோதிலும் ஜூலை 31 வரை 136 அடியாக மட்டுமே தேக்க முடியும் என ரூல்கர்வ் நடைமுறைக்கு உள்ளது, 137 அடிக்கு மேல் தேங்கும் தண்ணீர் கேரள பகுதிக்கு வெளியேற்றும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கி உள்ள போதிலும், ரூல்கர்வ் நடைமுறையால் உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீரை திறக்கவும், மேலும் ஒரு சுரங்கப்பாதையோ அல்லது மாற்று ஏற்பாடோ செய்ய தீவிரம் காட்ட வேண்டும் என்று என விவசாயிகள் தமிழக அரசை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் முல்லைப் பெரியாறு அணைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை போல நான்காண்டுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

முல்லை பெரியாறு அணை

2014 ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் ஏன் சொல்லத் தயங்குகிறார்? அவர்களின் கூட்டணிக்கட்சி கேரளாவில் ஆட்சியில் இருக்கிற காரணத்தினால், இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்று எதுவும் கூறாமல் உள்ளனர். அதேநரம் விவசாயிகளுக்கும், இந்த அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்து கவலை இல்லை.

தோழமைக் கட்சியின் வாக்குகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கூட விவசாயிகளுடைய வாக்குகளுக்கு கொடுக்கவில்லை. கேரளாவில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை உடனடியாக தடுத்து நிறுத்தி, ரூல்கர்வ் நடைமுறையை மாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா? காவேரி உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, பாலாறு உரிமை, கச்சத்தீவு உரிமை என தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் ஒவ்வொன்றால பறிபோய் கொண்டிருக்கிறது, இது இப்படியே தொடர்ந்தால் மௌனச் சாமியராக இருக்கும் ஸ்டாலினை கண்டித்து மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.