Video: கோபத்தின் உச்சத்தில் கௌதம் கம்பீர்… மைதான ஊழியருடன் வாக்குவாதம் – காரணம் என்ன?

Gautam Gambhir Oval Pitch Curator Argument: இங்கிலாந்து – இந்தியா அணிகள் தற்போது ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் மோதி வருகின்றன. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அந்த வகையில், 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் (ஜூலை 31) அன்று நடைபெற இருக்கிறது. தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ கூட கோப்பையை இங்கிலாந்திடம் தாரைவார்க்க வேண்டிய சூழல் உருவாகும். 

இதனால், இந்திய அணி சிறப்பான பிளேயிங் லெவன் காம்பினேஷனை அமைக்க திட்டமிட்டு வருகிறது. தொடர்ந்து, லண்டனில் தனது பயிற்சியையும் தொடங்கியிருக்கிறது. ஜூலை 27ஆம் தேதிதான் 4வது போட்டி நிறைவடைந்த நிலையில், 3 நாள்கள் இடைவெளியில் அடுத்த போட்டி நடப்பதால் இந்திய வீரர்கள் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று பயிற்சியை தொடங்கினார்கள்.

Gautam Gambhir: கௌதம் கம்பீர் வாக்குவாதம்

லண்டன் ஓவல் மைதானத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தபோது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், ஓவல் மைதானத்தின் ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்திய அணியின் பயிற்சிக்கு போதிய வசதிகளை ஏற்படுத்த தவறியதால் கௌதம் கம்பீர் மைதான ஊழியர்களிடம் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து இந்த மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வீடியோக்களும் வெளியாகின. அதில், கௌதம் கம்பீர், மைதான ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, மைதான ஊழியரை நோக்கி விரலை நீட்டி, சத்தமான குரலில் பேசிய கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ சொல்லக்கூடாது” என கத்தினார். இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் மற்றும் மற்ற இந்திய பயிற்சியாளர் குழுவினர் அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டனர்.

Gautam Gambhir: ‘நீ ஒரு மைதான ஊழியர் தான்…’

குறிப்பாக, கௌதம் கம்பீர் மீது ஓவல் மைதான ஊழியர்கள் புகார் அளிக்கப்போவதாக கூறியதாகவும், அதற்கு கௌதம் கம்பீர், “நீ எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல், ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீ சொல்லாதே” என்றார். கௌதம் கம்பீர் ஓவல் மைதானத்தில் ஆடுகள பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் என்பவருடன்தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

“நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ எங்களுக்குச் சொல்ல வேண்டாம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ எங்களில் யாரிடமும் சொல்ல முடியாது. நீ ஒரு மைதான ஊழியர், ஒரு ஊழியரை போல் இரு” என கௌதம் கம்பீர், லீ ஃபோர்டிஸ் உடன் பேசியதாக கூறப்படுகிறது. இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக்கும் ஃபோர்டிஸிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. சிதான்ஷூ கோடக்கிடம் ஃபோர்டிஸ் தனது நிலைப்பாடு குறித்து பேசிக்கொண்டிருக்க, மீண்டும் கம்பீர் தூரத்தில் இருந்து அவரை நோக்கி விரலை நீட்டி அதிருப்தியுடன் பேசினார். 

Gautam Gambhir: மோதலுக்கு காரணம் இதுதான்! 

கௌதம் கம்பீர், தான்ஷூ கோடக் ஆகிய இருவரும் ஓவல் மைதானத்தின் மத்திய ஆடுகளத்தை பார்வையிட வந்துள்ளனர். போட்டிக்கு முன் ஒவ்வொரு அணியும் விளையாடும் ஆடுகளத்தை பார்வையிடுவது வழக்கம்தான். அப்படி கௌதம் கம்பீர் ஆடுகளத்தை பார்வையிட சென்றபோது, ஆடுகளத்தில் இருந்து 2.5 மீட்டர் தள்ளி நின்று பார்வையிடுங்கள் என ஃபோர்டிஸ், கௌதம் கம்பீரிடம் தெரிவித்துள்ளார். இதுதான் பிரச்னைக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு பிறகுதான், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீ சொல்லக் கூடாது என கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார். அந்த வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. கௌதம் கம்பீர் எல்லை மீறி சில வார்த்தைகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

சாய் சுதர்சன் முதல் ஆளாக ஓவல் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள வருகை தந்தார். கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷூல் கம்போஜ் உள்ளிட்ட வீரர்களும் இருந்ததை வீடியோவில் பார்க்க முடிந்தது. பயிற்சியாளர் குழுவினர் பலரும் அங்கிருந்தனர்.

மேலும் படிக்க | புதிய பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண்! கம்பீர் நீக்கமா? பிசிசிஐ பதிவு?

மேலும் படிக்க | இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்! 3 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த டி20 வீரர்!

மேலும் படிக்க | இந்திய அணி வெற்றியை அடைய… இந்த 4 மாற்றங்களை கண்டிப்பாக செய்யணும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.