கடைகள் உரிமம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தகவல்

சென்னை: வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 கோடியாக உயர்ந்தது.

ஒவ்வொரு மாவட்டம், ஊராட்சி வாரியாக அவரது ஆட்சியில் கட்டணம் நிர்ணயித்துவிட்டு, தற்போது திமுக அரசைக் குறை சொல்கிறார் பழனிசாமி. அவரது இரட்டை வேடத்தையே இது வெளிப்படுத்துகிறது.

கிராமப்புற ஊராட்சிகளில் வணிகம். தொழில்புரிய பல்வேறு உரிமங்கள் ‘அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்’ என்று பழைய நடைமுறையில் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் இந்த உரிமம் புதுபிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது. இதன் மூலம் ஊராட்சி களுக்கு வரி வருவாய் கிடைத்து வருகிறது.

அதேநேரத்தில், முறையான விதிகள் இல்லாததால் கிராம ஊராட்சிகள், தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான கட்டணங்களை நிர்ணயம் செய்து, அதிக அளவில் கட்டணம் வசூலித்தன. இந்தக் குறைகளை நீக்கும்பொருட்டும், பல்வேறு வணிகர்களின் கோரிக்கையை ஏற்றும், தற்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக, உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் உள்ள விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழு கிராமப்புறங்களில் சிறு வணிகர்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.