IPL Latest News : ஐபிஎல் 2026 தொடருக்கான பணிகளை அனைத்து ஐபிஎல் அணிகளும் தொடங்கிவிட்டன. நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்க இருக்கும் நிலையில், பிளேயர்களை டிரேடிங் செய்வது தொடர்பாக அணிகளுக்கு இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதேபோல் பயிற்சியாளர்களை மாற்றுவது தொடர்பான ஆலோசனையிலும் ஐபிஎல் அணிகள் தீவிரமாக இறங்கியிருக்கும் நிலையில், கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார். இவரின் விலகலை கேகேஆர் அணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
சந்திரகாந்த் பண்டிட் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக 2023 ஆம் ஆண்டு இணைந்தார். அவர் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே, அதாவது 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டும் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் தொடர்ந்தார். ஆனால், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி கொல்கத்தா அணிக்கு படுமோசமாக அமைந்தது. 14 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே கேகேஆர் வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியை தழுவி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தையே பிடித்தது.
இதனால், அணியில் பெரும் மாற்றங்களைச் செய்ய கேகேஆர் அணி முடிவெடுத்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட்டை கேகேஆர் அணி விடுவித்தது. இதனை தங்களின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உறுதி செய்தது. அதேநேரத்தில் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருக்கும் பார்த் அருண், அந்த பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பாரத் அருண் கேகேஆர் அணியில் இருந்து விலகுவதை அந்த அணி உறுதிப்படுத்தவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பாரத் அருண் தங்கள் அணியில் இணைந்துவிட்டதாக உறுதிபடுத்தவில்லை. அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது. பாரத் அருண் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியவர். இவரை அணியுடன் இணைக்க சிஎஸ்கே முயற்சி செய்வதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது.
அதேநேரத்தில் பாரத் அருண் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸா அல்லது லக்னோ அணியா? என்பதை பாரத் அருண் விரைவில் முடிவு செய்ய உள்ளார்.
மேலும் படிக்க | CSK: சாம் கரனை விடுவித்து.. இந்த 3 பவுலருக்கு குறிவைக்கும் சிஎஸ்கே!
மேலும் படிக்க | SRH அணியின் முக்கிய ஆல்ரவுண்டரை தட்டி தூக்கும் சிஎஸ்கே? டிரேட் மூலம் வாய்ப்பு!