சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற அரசு முன்வர வேண்டும்: முத்தரசன்

சென்னை: சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி இளைஞர் கவின் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, சாதி – ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

படுகொலை செய்யப்பட்ட கவின் சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்தார். இவர் திருநெல்வேலி சித்த மருத்துவர் சுபாஷினியை நேசித்துள்ளார். இருவரும் மனம் இசைந்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை ஏற்காத சாதிய ஆதிக்க சக்திகள் 27.07.2025 அன்று கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் கல்வியும், அறிவும் வளர்ந்தோங்கும் சூழலில் இதுபோன்ற படுகொலைகள் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கிறது. சமத்துவச் சிந்தனைகளை தடுக்கிறது. சமூக பதற்றத்தை அதிகரிக்க செய்கிறது. இது தமிழ் சமூகத்திற்கு பேராபத்தாகும். சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.