பவானிசாகர் அணையிலிருந்து ஜூலை 31 முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் 135 நாட்களுக்கு 26827.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு பவானிசாகர் அணையிலிருந்து 2025-2026-ஆம் ஆண்டு, முதல்போக பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாக 103500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 31.07.2025 முதல் 14.08.2025 முடிய நாளொன்றுக்கு 2300 கனஅடி/விநாடி வீதம் 15 நாட்கள் சிறப்பு நனைப்பிற்கு 2980.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் 15.08.2025 முதல் 12.12.2025 முடிய 120 நாட்களுக்கு, முதல்போக நன்செய் பாசனத்திற்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 135 நாட்களுக்கு 26827.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 22,114 ஏக்கர் நிலங்களும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் 20,622 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் வகையில், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் பாசனத்திற்கு, மேட்டூர் அணையிலிருந்து 01.08.2025 முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.