“அரசியலில் எதுவும் நடக்கலாம்” – முதல்வர் ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்த ஓபிஎஸ் கருத்து

சென்னை: முதல்வர் ஸ்டாலினை இன்று இரண்டாவது முறையாக சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று அறிவித்தார்.

இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை, அடையாறு பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.

பின்னர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு இன்று மாலை திடீரென வந்த ஓ.பன்னீர்செல்வம், அவருடன் சந்திப்பு நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் ஜெயலலிதாவோடு 25 ஆண்டு காலம் நேரடி பார்வையில் பணியாற்றி இருக்கிறேன். அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அனைத்தும் எனக்குத் தெரியும்.

மக்களவையில் சமக்ரா சிக்‌ஷா நிதி உதவி பற்றி கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு அதை ஏற்கவில்லை. தமிழகத்துக்கு உரிய நிதி கொடுக்காததால் பாஜக மீது எனக்கு வருத்தம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறினால், அதைக் கண்டறிந்து தினமும் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகிறேன்” என்றார்.

முன்னதாக, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரே நாளில் 2-வது முறையாக தற்போது முதல்வரை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

“நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி!” என்று பிரேமலதா விஜயகாந்த் உடனான சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி!” என்று முதல்வர் ஸ்டாலின் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். வாசிக்க > ஸ்டாலினுடன் சந்திப்புகள், தவெக ஆப்ஷன்… – பாஜகவை ‘ஒதுக்கிய’ ஓபிஎஸ் இனி..?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.