புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.யின் நொய்டாவில் 31-வது செக்டார் குடிசைப் பகுதியில் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயினர். அக்டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்பெண் காணாமல் போய் வழக்கு பதிவானது. பாயலின் கைப்பேசி ஒரு ரிக் ஷா ஓட்டுநரிடம் இருந்து போலீஸாரிடம் சிக்கியது.
பிறகு இதனை அவருக்கு வழங்கிய 31-வது செக்டார் டி-5 பங்களாவின் பணியாளர் சுரேந்தர் கோலி போலீஸாரிடம் சிக்கினார். விசாரணைக்கு பிறகு டி-5 பங்களா வளாகத்திலும் அதன் முன்புள்ள கால்வாயிலும் டிசம்பர் 2006-ல் தோண்டப்பட்டது. இதனுள் ஒன்றன்பின் ஒன்றாக சடலங்கள், எலும்புக்கூடுகள், 26 மண்டை ஓடுகளும் வெளியாகி நாட்டையே உலுக்கின.
இதன் காரணமாக பங்களா உரிமையாளர் மொஹீந்தர் சிங் புந்தேர் மீதும் புகார் எழுந்தது. குழந்தைகள், பெண்களை கொலை செய்ததுடன், சில உறுப்புகளை கோலி உட்கொண்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியானது. இருவரும் கைது செய்யப்பட்டு 10 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் கொலையானதாக வழக்குகள் பதிவாகின.
வழக்குகளின் விசாரணையில் டி-5 பங்களாவின் பெரும்பாலானப் பகுதிகளை சிபிஐ உடைத்துப் பார்த்தது. குற்றவாளிகளுக்கு பிரைன் மேப்பிங், நார்கோட்டிக் உள்ளிட்டப் பலவகை விசாரணைகளை நடத்தியது.
இதன் முடிவில், பணியாளர் சுரேந்தர் கோலி, ஒரு மனநோயாளி எனவும், அவர் குழந்தைகளை கொன்று அந்த உடல்களுடன் தவறான உறவு கொண்டதாகவும் தெரியவந்தது. இதற்கு கோலியின் உரிமையாளர் உடந்தையாக இருந்ததாகவும் சிபிஐ தெரிவித்தது. 6 வழக்குகள் மொஹீந்தர் சிங் மீதும், 13 வழக்குகள் கோலி மீதும் பதிவாகின.
இருவர் மீதான வழக்குகள் காஜியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றன. ஜுலை 2007-ல் வெளியான தீர்ப்பில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மேல்முறையீட்டு வழக்கில் உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்றம் அக்டோபர் 2023-ல் இருவரையும் விடுதலை செய்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இது தொடர்பான சிபிஐ மற்றும் உ.பி. அரசின் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மொஹீந்தர் சிங் புந்தேர் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டார். சுரேந்திர கோலி, மற்றொரு வழக்கில் இன்னும் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் சிபிஐ, உ.பி. போலீஸாரின் புலனாய்வுகள் குறித்தும் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. நிதாரி பங்களாவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான குற்றவாளி யார் என்பது கேள்வியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.