பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக்குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பான அந்த அறிக்கையில், “பஹல்காமில் 5 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேநாளில், சம்பவம் நடந்த இடத்தின் புகைப்படத்தை வெளியிட்டு ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ (டி.ஆர்.எப்.) என்ற அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பின்னர் மறுநாளும் பொறுப்பேற்பதாக அறிவித்தது.

ஆனால் ஏப்ரல் 26-ந்தேதி அந்த அறிவிப்பை திரும்பப்பெற்ற அந்த அமைப்பு, பின்னர் அது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால் வேறு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பிராந்திய உறவுகள் பலவீனமாக உள்ளன. இந்த பிராந்தியப் பதற்றத்தை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உதவி இல்லாமல் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்க முடியாது என ஒரு உறுப்பு நாடு தெரிவித்தது. மேலும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும், டி.ஆர்.எப்.புக்கும் இடையே தொடர்பு உள்ளது.

டி.ஆர்.எப். இந்த தாக்குதலை நடத்தியதாக மற்றொரு உறுப்பு நாடு கூறியதுடன், லஷ்கர்-இ-தொய்பாவும், டி.ஆர்.எப்.பும் ஒரே பெயர்கள்தான் என தெரிவித்தது. ஆனால் மற்றொரு நாடு இந்த கருத்துகளை நிராகரித்ததுடன், லஷ்கர்-இ-தொய்பா தற்போது செயல்படவில்லை எனவும் கூறியது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐ.நா. அறிக்கையில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய குறிப்பு இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிக்கை மூலம் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கருத்துகளுக்கு வலு சேர்த்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தடைகள் குழு தடை விதித்து வரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக வெளியாகி இருக்கும் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில் 1267 தடைகள் குழுவின் அனைத்து முடிவுகளும் ஐ.நா.வின் உயர்மட்ட அமைப்பின் உறுப்பினர்களால் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.