பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணை தலைவர்களாக நியமனம்

சென்னை: தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 51 பேர் அடங்கிய பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த குஷ்புவுக்கு, துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, எம்.சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் தர், ஏ.ஜி.சம்பத், பால்கனகராஜ் உள்ளிட்டோர் மாநில துணைத் தலைவர் பதவியைத் தொடர்கின்றனர்.

முன்னாள் எம்எல்ஏ கோபால் சாமி, ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், சுந்தர் உள்ளிட்டோர் புதிதாக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொன்.வி.பாலகணபதி, பேராசிரியர் ராம.சீனிவாசன், எம்.முருகானந்தம், பி.கார்த்தியாயினி, ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியில் தொடர்கின்றனர்.

விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கு, மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் மாநிலச் செயலாளர் பதவியில் நீடிக்கின்றனர். கதளி நரசிங்கபெருமாள், நந்தகுமார், ரகுராமன் ஆகியோர் புதிதாக மாநிலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞரணி மாநிலத் தலைவர் பதவிக்கு எஸ்.ஜி.சூர்யா, மகளிரணி மாநிலத் தலைவராக கவிதா காந்த், ஓபிசி அணி மாநிலத் தலைவராக வீர.திருநாவுகரசு, எஸ்.சி. அணி மாநிலத் தலைவராக பி.சம்பத்ராஜ், எஸ்.டி. அணி மாநிலத் தலைவராக ஏ.சுமதி, சிறுபான்மையினர் அணி மாநிலத் தலைவராக ஜான்சன் ஜோசப் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி மாநிலத் தலைவர் பதவியில் ஜி.கே.நாகராஜன் தொடர்கிறார்.

மேலும், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில ஊடக அமைப்பாளர் ரங்கநாயகலு, மாநில அலுவலக செயலாளர் சந்திரன் ஆகியோர் தங்களது பதவியில் தொடர்கின்றனர். மாநில துணைத் தலைவராக இருந்த நாராயணன் திருப்பதிக்கு மாநில தலைமை செய்தி தொடர்பாளர் பொறுப்பும், ஆன்மிகப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த நாச்சியப்பன் மற்றும் கே.டி.ராகவனுக்கு மாநிலப் பிரிவு அமைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மாநில தகவல் தொழில்நுட்ப அமைப்பாளராக மகேஷ்குமார், சமூக ஊடக அமைப்பாளராக பாலாஜி நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.