மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி.பிரக்யா சிங் தாக்குர், லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை வழங்கிய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி, “சந்தேகம் மட்டுமே வழக்கை முன்னோக்கிக் கொண்டு சென்றுவிடாது, குற்றச்சாட்டுகளைஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. சந்தேகத்தின் பலனைப் பெற்று குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார்.

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி அன்று வடக்கு மகாராஷ்டிராவில் மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள மாலேகான் மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ‘அபினவ் பாரத்’ என்ற இயக்கத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த இருசக்கர வானகம் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர் உள்பட 7 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகினர்.

இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் விசாரித்தது. பின்னர் 2011 முதல் தேசிய புலனாய்வு மையத்தின் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கிலிருந்து பிரக்யா சிங் தாக்கூர், லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சுகாதகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர், சுதாகர் தர் துவிவேதி, சமீர் குல்கர்னி ஆகிய 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பில், “மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்துக்காக லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் தான் ஆர்டிஎஸ் வெடிமருந்தை ஜம்மு காஷ்மீரில் இருந்து வாங்கிக் கொடுத்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை. அதேபோல் வெடிகுண்டு வைக்கப்பட்ட வாகனம் பிரக்யா தாக்குருடையது என்பதும் நிரூபிக்கப்படவில்லை. சம்பவம் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பிரக்யா தாக்கூர் சன்யாசி ஆகிவிட்டார். அவரது உடைமைகளை துறந்துவிட்டார். மேலும், ‘அபினவ் பாரத்’ இயக்கம் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் இல்லை.

மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் சமுதாயத்துக்கு எதிரான மோசமான நிகழ்வு தான். ஆனால், நீதிமன்றம் மதிப்பீடுகள் அடிப்படையில் தண்டனைகளை வழங்கிவிட முடியாது. இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. தண்டனையையும் மதிப்பீடுகள் அடிப்படையில் வழங்க முடியாது. என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.