பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இடம்பெறவில்லை

புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம்.

பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அவர்கள், வரைவுப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகக் கருதினால் அது தொடர்பாக அவர்கள் கோரிக்கை விடுக்கலாம். வாக்காளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ செப்டம்பர் 1-ம் தேதி வரை இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து தீர்வைப் பெறலாம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் பிஹாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.93 கோடியாக இருந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல்கள், மாநிலத்தின் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் (DEO) பிஹாரில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் காகித வடிவிலும், டிஜிட்டல் வடிவிலும் வழங்கப்படும்.

பிஹாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் பதிவு அதிகாரிகள் ஆகியோரிடம், எந்த ஒரு வாக்காளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியோ ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை காணாமல் போன தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது, தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைக்கலாம்.” என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.