ஆடிப்பெருக்கு நாளில் நதிகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

சென்னை: “நீர்நிலைகளை காக்கும் வகையில், ‘நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கவுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் நதிகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும்” என நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படைத் தேவையான நீர்வளங்கள் தமிழகத்தில் இன்று நிலைகுலைந்து கிடக்கின்றன. பழம்பெருமை வாய்ந்த நமது ஆறுகள் தற்போது, கழிவுநீரால் சூழப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இந்த நிலை இப்படியே தொடருமானால் நமது வருங்கால தலைமுறையினருக்கு ஆறு, ஏரி, குளம் ஆகியவை எல்லாம் காணக் கிடைக்காத அதிசயப் பொருளாகிவிடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடமும் ஆளும் அரசிடமும் எடுத்துக் கூறும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.

எனவே, நீர்வளம் காப்போம் என்ற பெயரில் கேட்பாரற்று கிடக்கும் நமது நதிகள் மற்றும் நீர்நிலைகளைக் காக்கும் பிரச்சாரத்தை முன்னெடுக்கவிருக்கிறது தமிழக பாஜக. அதன்படி, ஆடிப்பெருக்கு நாளன்று (நாளை) நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காலையில் ஈரோடு சங்கமேஸ்வரர் முக்கூடலில் ஆரத்தி எடுத்து இப்பிரசாரத்தைத் தொடங்கி வைப்பதோடு, மாலையில் நெல்லையில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்திலும் ஆரத்தி எடுத்து வழிபட இருக்கிறேன். மற்ற நதிகளிலும் கட்சி நிர்வாகிகளை ஆரத்தி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதனைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் 67 அமைப்பு மாவட்டங்களிலும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள், மரங்கள் நடுவது, மனிதச் சங்கிலி போராட்டம், நீர்நிலைகளைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் போன்றவையும் பின்வரும் நாட்களில் நடைபெறவிருக்கின்றன. மேலும், அழிந்து வரும் நீர்நிலைகளைக் காப்பதற்கான உறுதிமொழியுடன் இந்த பிரச்சாரம் முடிவடையவுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.