285 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதியவர்: நடந்தது என்ன..?

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழையில் கணவனால் கைவிடப்பட்ட பெண், தனது 15 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் படித்து வந்த பள்ளியில், காவலாளியாக பணி செய்து வந்த 75 வயதான முதியவர், இந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஒரு நாள் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி மிகவும் சோகமாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து சக மாணவிகள், அந்த மாணவியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி, பள்ளியில் காவலாளியாக பணியாற்றும் முதியவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும், அதனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி கதறி அழுதார். இது பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கும் சென்றது.

பின்னர் இதுகுறித்து ஆலப்புழை வடக்கு போலீசில் பள்ளி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், 75 வயது முதியவரை போலீசார், போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான விசாரணை செங்கன்னூர் கோர்ட்டில் நடந்தது. பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது மாணவியிடம், நீதிபதி நடத்திய ரகசிய விசாரணையில், எனது கர்ப்பத்திற்கு காரணமான ஆண் நண்பரை காப்பாற்றுவதற்காக, காவலாளியான முதியவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறினேன் என்று மாணவி கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, முதியவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் பொய் வழக்கு போட்டு முதியவரை சிறையில் அடைத்த போலீசாரையும் கண்டித்தார். இதனை தொடர்ந்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி செங்கன்னூரை சேர்ந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.