லண்டன்,
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் சுருண்டது.இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும்.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 51 ரன்களும், ஆகாஷ் தீப் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கே.எல். ராகுல் 7 ரன்களிலும், சாய் சுதர்சன் 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்ற இங்கிலாந்து அணியின் திட்டத்திற்கு ஆகாஷ் தீப் , ஜெய்ஸ்வால் முட்டுக்கட்டைபோட்டனர். ஆகாஷ் தீப் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார் . அவர் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 118 ரன்களில் ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த துருவ் ஜுரேல் 34 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ஜடேஜா , வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் நிலைத்து ஆடிய ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார் . மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடினார் . பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்தார்.
பின்னர் ஜடேஜா 53 ரன்களிலும் , வாஷிங்டன் சுந்தர் 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . இறுதியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 374ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடியது தொடக்கம் முதல் பென் டக்கெட் , ஜாக் கிராலி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 14 ன்களுக்கு முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இறுதியில் 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது . இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவைப்படுகிறது .
இந்த நிலையில்,இந்த போட்டியில் அரைசதம் அடித்ததால் ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 516 ரன்கள் எடுத்துள்ளார். 6 மற்றும் அதற்கு கீழ்வரிசையில் களம் இறங்கி ஒரு தொடரில் 500 ரன்னுக்கு மேல் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக முறை (6 தடவை) 50 ரன்னுக்கு மேல் எடுத்த இந்தியர் என்ற மகத்தான சாதனையை ரவீந்திர ஜடேஜா சொந்தமாக்கினார். இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 5 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.