IND vs ENG: ஓவல் டெஸ்டில் ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்… 5ம் நாள் யாருக்கு அதிக சாதகம்?

India vs England 5th Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 31ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று தொடங்கியது. 

டாஸை வென்ற இங்கிலாந்து (Team England) முதலில் பந்துவீசியது. அதன்படி இந்தியாவை (Team India) முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை அடித்தது. தொடர்ந்து 23 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசியது. ஆனால், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 374 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

India vs England: அதிரடி காட்டிய ஹாரி புரூக் – ஜோ ரூட் 

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 50/1 என்ற நிலையில் இருந்து இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. பென் டக்கெட் உடன் கேப்டன் போப் களமிறங்கினார். டக்கெட் 54 ரன்கள், போப் 27 ரன்களுடன் ஆட்டமிழக்க ஜோ ரூட் – ஹாரி புரூக் ஜோடி சிறப்பாக விளையாடத் தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்கு முன் அதிரடியை தொடங்கிய இந்த ஜோடி, தேநீர் இடைவேளை வரை அதிரடியாக விளையாடியது.

India vs England: சிராஜ் விட்டதும், பிடித்ததும்… 

இந்த ஜோடி 195 ரன்களை குவித்தபோது, தேநீர் இடைவேளைக்கு சில ஓவர்கள் முன் ஹாரி புரூக் 111 ரன்களில் (Harry Brook Century) ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் பந்துவீச்சில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 19 ரன்களில் இருந்தபோது சிராஜ் கேட்சை கோட்டைவிட்ட நிலையில், அதற்கு பிறகு 92 ரன்களை அடித்துள்ளார்.  அவருக்கு பின் களம் கண்ட ஜேக்கப் பெத்தல் நீண்ட நேரம் திணறி வந்த நிலையில், அழுத்தம் அதிகமாகி 31 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து பிரசித் கிருஷ்ணாவிடம் ஆட்டமிழந்தார். 

India vs England: ஜோ ரூட் காலி… ஆட்டம் நிறுத்தம்…

தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரில் சதம் அடித்த ஜோ ரூட் (Joe Root) ஆட்டமிழந்தார். அவர் 105 ரன்களை அடித்திருந்தார்.  ஜேமி ஸ்மித் – ஜேமி ஓவர்டன் களத்தில் விளையாடி வந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து மைதானத்தில் ஈரப்பதம் அதிகமானதால் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. நாளை 5வது நாளில் ஆட்டம் தொடங்கும். 4 விக்கெட் எடுத்தால் இந்தியாவும், 35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்தும் வெற்றி என்ற நிலையில் உள்ளன.

Play has been called off for Day 4!

We will see you tomorrow for Day 5 action.

Scorecard https://t.co/Tc2xpWMCJ6#TeamIndia | #ENGvIND pic.twitter.com/xtbW1SBdIQ

— BCCI (@BCCI) August 3, 2025

India vs England: ஆதிக்கம் காட்டும் இந்தியா 

தேநீர் இடைவேளை வரை இங்கிலாந்து 317 ரன்களுக்கு 4 விக்கெட் என இருந்த நிலையில், தற்போது 339 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் உள்ளது. அதாவது 10 ஓவர்களில் இங்கிலாந்து 22 ரன்களை மட்டும் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் புதிய பந்தை எடுக்க 3.4 ஓவர்கள் உள்ளன. மேலும், கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய வருவாரா இல்லையா (Chris Woakes Injury Update) என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவருக்கு ஆட்டத்தின் முதல் நாளே இடது தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது.

India vs England: நாளை யாருக்கு அதிக சாதகம்?

அவர் முதல் நாளுக்கு பின்னர் பந்துவீசாத நிலையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கும் செய்யவில்லை. அப்படியிருக்க நாளைய ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்ய வருவதும் சந்தேகம்தான். அவர் வராவிட்டால் இந்தியா இன்னும் 3 விக்கெட்டுகளை எடுத்தாலே போதுமானது. இன்னும் கஸ் அட்கின்சன், ஜாஸ் டங் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். இந்திய அணி தற்சமயம் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இன்றே ஆட்டம் நடந்திருந்தால் இந்தியா அழுத்தத்தை அதிகமாக்கி ஓரிரண்டு விக்கெட்டை எடுக்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் தற்சமயம் போட்டி தடைப்பட்டதால் நாளை காலைதான் பந்துவீச வேண்டும். இதனால் இரு தரப்புக்கும் சாதக பாதகங்கள் உள்ளன. இங்கிலாந்து இதற்காக பேட்டிங்கில் நல்ல பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஓய்வு எடுக்கலாம். இருப்பினும், ஆட்டம் 5ம் நாளான நாளைக்கு சென்றது இந்திய அணிக்கே அதிக நன்மை என்றும் கூறப்படுகிறது. ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருக்கும் என்பதால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது எனலாம். 

மேலும் படிக்க | ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் – 55 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனை!

மேலும் படிக்க | பும்ரா இல்லாத போட்டியில் மட்டும் எப்படி நல்ல பந்து வீசுறீங்க? சீராஜ் சொன்ன சீக்ரெட்!

மேலும் படிக்க | இதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்ல.. எச்சரித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் டங்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.