சிங்கப்பூர்,
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் எதிர்பார்த்தது ேபாலவே பிரான்சின் லியோன் மார்சந்த் 4 நிமிடம் 04.73 வினாடிகளில் முதலாவதாக நீந்தி வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ஜப்பானின் டோமோயுகி மேட்சுஷிதா ( 4 நிமிடம் 08. 32 வினாடி) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
23 வயதான லியோன் மார்சந்த் ஏற்கனவே 200 மீட்டர் தனிநபர் மெட்லேவிலும் வாகை சூடியிருந்தார். 2022 மற்றும் 2023-ம் ஆண்டு உலக நீச்சல், 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் அதைத் தொடர்ந்து இப்போது உலக நீச்சல் அனைத்திலும் அவர் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் மெட்லேவில் தங்கமகனாக வலம் வருவது கவனிக்கத்தக்கது.
இதன் பெண்கள் பிரிவில் கனடா வீராங்கனை சம்மர் மெக்இன்தோசின் தங்கப்பதக்கம் வென்றார் அவர் 4 நிமிடம் 25.78 வினாடிகளில் இலக்கை எட்டிப்பிடித்தார். நடப்பு தொடரில் அவரது 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவரை விட 8 வினாடி பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் ஜென்னா பாரெஸ்டர், ஜப்பானின் மியோ நரிதா ஒருசேர 2-வது இடத்தை பிடித்து (4 நிமிடம் 33.26 வினாடி) வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர்.