உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான (SVEEP) தூதராக நியமிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், நடுநிலைத்தன்மை குறித்த கவலைகள் காரணமாக அந்த பொறுப்பிலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, ஒரு பொது பிரபலம் அரசியல் தொடர்பை கொண்டிருக்கும்போது, அரசு சார்ந்த பிரச்சாரங்களில் ஈடுபடுவதன் நெறிமுறைகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிங்க: சிராஜ் செய்த பெரிய தவறு… வச்சு செய்த ஹாரி புரூக் – தொடரை இழக்கும் இந்தியா?
நீக்கத்திற்கான காரணம்
கடந்த ஜூன் 8 அன்று, கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, ரிங்கு சிங் ஒரு அரசியல் பிரமுகருடன் தன்னை இணைத்து கொண்டதால், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அவர் நடுநிலையுடன் செயல்பட முடியாது என்ற கவலை எழுந்தது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான தூதர்கள், அரசியல் சார்பற்றவர்களாகவும், நடுநிலைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாக கருதப்பட்டால் கூட, அது பிரச்சாரத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதன் காரணமாகவே, ஆகஸ்ட் 1, 2025 அன்று, உத்தரப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு, ரிங்கு சிங் இடம்பெற்றுள்ள அனைத்து விளம்பர பதாகைகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டார்.
ரிங்கு சிங்கின் நிலைப்பாடு
ரிங்கு சிங், தனது நிச்சயதார்த்தத்திற்கு பிறகு எந்தவொரு அரசியல் அறிக்கையையும் வெளியிடவில்லை அல்லது அரசியலில் சேரும் எண்ணத்தையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு ரிங்கு சிங் தரப்பிலிருந்தோ அல்லது பிரியா சரோஜ் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்ல. இந்த சர்ச்சை, ரிங்கு சிங்கிற்கு உத்தரப் பிரதேச அரசால் வழங்கப்படவிருந்த அடிப்படை கல்வி அதிகாரி (BSA) பதவியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் தொடர்பான கோப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இருப்பினும், அடிப்படை கல்வித்துறை அதிகாரிகள் இந்த செய்தியை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு திரில்லிங்கான வெற்றியை தேடித் தந்ததன் மூலம், ரிங்கு சிங் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அவரது இந்த புகழை பயன்படுத்தி, இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதே SVEEP தூதராக அவரை நியமித்ததன் நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையால், அவர் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங் கடந்த சில சீசன்களாக சரியாக விளையாடவில்லை. இந்நிலையில் அவரை அணி கழட்டிவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிங்க: பும்ரா இல்லாத போட்டியில் மட்டும் எப்படி நல்ல பந்து வீசுறீங்க? சீராஜ் சொன்ன சீக்ரெட்!