பல்லாரி,
கர்நாடக மாநிலம் பல்லாரி (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் தொட்ட பசவா (வயது 19). இவர், ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின் போது 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தொட்ட பசவாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அப்போது சிறுமியுடன் சேர்ந்து அவர் புகைப்படம் எடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் தொட்ட பசவா வைத்திருந்தார்.
இதுபற்றி அந்த சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்தது. உடனே அவர் ஆத்திரமடைந்தார். பின்னர் ஐ.டி.ஐ.க்கு தனது நண்பர்களுடன் சிறுமியின் அண்ணன் சென்றார். அங்கு மைதானத்தில் வைத்து தனது தங்கையின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்தது குறித்து தொட்ட பசவாவுடன் அவர் சண்டை போட்டார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் உள்பட 10 பேர் சேர்ந்து தொட்ட பசவாவை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். கிரிக்கெட் மட்டை, இரும்பு கம்பியாலும் அவரை தாக்கினார்கள். தன்னை விட்டு விடும்படி அவர்கள் காலில் விழுந்து கெஞ்சியும் தொட்ட பசவா மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பல்லாரி டவுன் போலீசார், சிறுமியின் அண்ணன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவான நபர்களில் பலர் மாணவர்கள் ஆவார்கள். அதே நேரத்தில் தொட்ட பசவாவை 10 பேர் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.