சோழதேவனஹள்ளி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எசருகட்டா மெயின் ரோட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இதன் உரிமையாளர் அஷ்ரப் (வயது 37) ஆவார். அந்த தங்கும் விடுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தான் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி அறை எடுத்து தங்க தொடங்கினார்.
இதனால் அஷ்ரப், மாணவி இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1-ந் தேதி இரவு விடுதி முன்பாக மாணவி நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு காரில் வந்த அஷ்ரப் ஜாலியாக வலம் வரலாம் என்று மாணவியை அழைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, அஷ்ரப்புடன் மாணவி சென்றுள்ளார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்து சென்று, அவரை அஷ்ரப் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து தங்கும் விடுதி உரிமையாளரான அஷ்ரப்பை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சோழதேவனஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.