புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றூப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது. 5வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுத்த அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டாவது இன்னிங்சில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இறுதி நேரத்தில் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து 46 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என 53 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் அவர் இனியும் அசத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
வாஷிங்டன் சுந்தர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிக்காட்டி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு இனி தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்ற உறுதி மட்டும் கிடைத்தால் இன்னும் அவரால் அசத்தலாக செயல்பட முடியும்.
பவுலர்களை வைத்து அவர் விளையாடிய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அதோடு பந்துவீச்சிலும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வீரராக இருக்கிறார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியில் நீடிக்க அவருக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் நிர்வாகம் அவரது இடத்தை நிரந்தரம் செய்து தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கினால் இதே போன்ற செயல்பாடு தொடர்ந்து கிடைக்கும். இந்த டெஸ்ட் தொடரில் அற்புதமாக செயல்பட்டுள்ள அவர் இனிவரும் காலத்தில் நட்சத்திர ஆல்ரவுண்டராக மாறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.