உத்தராகண்ட் மேக வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 50 பேர் மாயம் – பாதிப்பு நிலவரம் என்ன?

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், சுமார் 50 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலச்சரிவிலும், கரைபுரண்டோடிய வெள்ளத்திலும் சிக்கிய ஏராளமான வீடுகளும், தங்கும் விடுதிகளும் அடித்துச் செல்லப்பட்டன. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘உத்தரகாசியின் தாராலியில் நடந்த இந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவத்தில், காயமடைந்த அனைவரும் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் தாமியுடன் பேசியதாகவும், நிலைமையை முழுமையாக கண்காணித்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், நிவாரண மற்றும் மீட்புக் குழுக்கள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “தாராலி [உத்தரகாசி] பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் இழப்புகள் குறித்த செய்தி மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாவட்ட நிர்வாகக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்புக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார்.

இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹர்சிலுக்கு அருகிலுள்ள கீர் காட் பகுதியில் தாராலி கிராமத்தில் ஒரு பெரிய மண்சரிவு ஏற்பட்டது, இதனால் குடியிருப்பு வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐபெக்ஸ் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். சேதத்தின் அளவு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு உறுதுணையாக ராணுவம் உறுதியாக நிற்கும்” என்று தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் உத்தரகாசி மாவட்டத்தின் தாராலி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அதே மாவட்டத்தில் உள்ள சுகி கிராமத்தில் மற்றொரு மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தாராலியில் ஏற்பட்ட தாக்கத்தைப் போலவே, சுகி மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேறும் சகதியும் ஆறு போல பாய்ந்தது. இன்று உத்தரகாசியில் மேகவெடிப்பு ஏற்பட்ட சுகி மற்றும் தாராலி கிராமங்களுக்கு இடையே உள்ள தூரம் 16 கிலோமீட்டர் என தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு பகுதிகளும் ஹர்ஷல் மற்றும் கங்கோத்ரிக்கு அருகில் உள்ளன. சுகி பகுதியில் நடந்த இரண்டாவது மேக வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.