மும்பை,
மும்பையை சேர்ந்த 80 வயது முதியவர் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் வெளிநாட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் முதியவர் மகனை தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் பணம் கேட்டார். தந்தை வங்கிக்கணக்கில் ரூ.9 கோடி இருந்தநிலையில் தன்னிடம் ஏன் பணம் கேட்கிறார் என்ற சந்தேகம் மகனுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தந்தையின் வங்கிக்கணக்கு விவரங்களை ஆய்வு செய்தார். அப்போது தந்தை ரூ.8.75 கோடிக்கு மேல் பணத்தை பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தந்தையிடம் விசாரித்தபோது, தன்னிடம் 4 பெண்கள் பணத்தை பறித்துகொண்ட சோக கதையை விவரித்தார். இது குறித்து மகன், மும்பை சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகநூலில் முதியவர் உலாவினார். அப்போது சார்வி என்ற பெண்ணுக்கு நட்பு கோரிக்கை வைத்தார். முதியவரின் நட்பு கோரிக்கையை ஏற்ற சார்வி தான் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக முதியவரிடம் கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண் முதியவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய முதியவர் அவருக்கு லட்சம், லட்சமாக பணத்தை அனுப்பி உள்ளார். திடீரென சார்வி முதியவரிடம் பேசுவதை நிறுத்தினார்.
அதன்பிறகு சார்வியின் தோழி என கூறி முதியவருடன் கவிதா என்ற பெண் பேசத்தொடங்கினார். அவர் முதியவரிடம் ஆபாச வார்த்தைகளை அள்ளி விட்டு பேசியுள்ளார். முதியவரிடம் ஆபாசமாக பேசியதை செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இதுபற்றி வெளியே சொல்லிவிடுவதாகவும் மிரட்டி அவரும் பணம் பறித்து உள்ளார்.
அதன்பிறகு சார்வியின் தங்கை என கூறி தினாஸ் என்ற பெயரில் பெண் ஒருவர் முதியவரிடம் பேசினார். அவர் சார்வி நோய் பாதித்து உயிரிழந்துவிட்டதாகவும், ஆஸ்பத்திரி கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி முதியவரிடம் பணம் பறித்து உள்ளார். அதன்பிறகு அவரும் திருமணம் செய்வதாக கூறி முதியவரிடம் மீண்டும், மீண்டும் பணத்தை கறந்தது தெரியவந்தது.
இதன் பின்னர் ஜாஸ்மின் என்ற பெயரில் இன்னொரு பெண் முதியவரை தொடர்பு கொண்டார். அவரும் இதே பாணியில் முதியவரிடம் பணத்தை கறந்தார். இதில் விசித்திரம் என்னவென்றால் முதியவர் எந்த பெண்ணையும் நேரில் பார்க்கவில்லை.
வலைத்தளத்தில் பழகிய அவர்களிடம் ஆன்லைன் மூலமே சுமார் ரூ.9 கோடியை அனுப்பி வைத்துள்ளார். 21 மாத காலமாக இந்த மோசடி அரங்கேறி உள்ளது. ஆனால் முதியவர் தான் மோசம் போனதாக கடைசி வரை உணரவில்லை என்பது தான் பரிதாபம்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதியவரிடம் பணத்தை கறந்தது வெவ்வேறு பெண்களா? அல்லது ஒரே பெண் தான் வெவ்வேறு பெயர்களில் இந்த மோசடியில் ஈடுபட்டாரா?, இதன் பின்னணியில் கும்பல் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.