களைகட்டிய பாம்பன் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 10-ம் ஆண்டு தொடக்க விழா!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்களுக்கான பிரத்யேகமான ‘கடல் ஓசை’ சமுதாய வானொலியின் பத்தாம் ஆண்டு விழா தொடக்க விழா நடைபெற்றது.

கடல் ஓசை சமுதாய வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ விழாவிற்கு தலைமை வகித்தார். எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தான்தின், வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன். துணை காவல் கண்காணிப்பாளர் மீரா, வள்ளலார் குழுமம் நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கே.வி.கே., குழுமம் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேரா.ஞானசம்பந்தன் தலைமையில் மீனவர் குடும்பங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது வருமானமா, நிர்வாகமா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு உயிர் காக்கும் கவசம் (லைஃப் ஜாக்கெட்) வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது, “ராமேசுவரம் தீவில் வடக்கே பாக் நீரிணை கடற்பகுதியில் மீனவர்கள் ஒரு சமயத்தில் கடலுக்கு போவார்கள், தெற்கே மன்னார் வளைகுடாவில் பாம்பன் மீனவர்கள் ஒரு சமயத்தில் கடலுக்கு போவார்கள். அனைத்து தரப்பு மீனவர்களுக்கும் தேவையான புயல், கடல் சீற்றம், சுனாமி என அனைத்து பேரிடர் தகவல்களையும் அளிப்பதற்காக ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது.

வலையில் சிக்கும் ஆமைகளை மீட்டு மீண்டும் கடலில் விடும் மீனவர்களுக்கு கடல் ஓசை சமுதாய வானொலி சார்பாக கடல் காப்பான் விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. குரலற்றவர்களாக இருக்கும் மீனவர்களின் குரலாக கடல் ஓசை சமுதாய வானொலி இயங்குகிறது” என்று ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறினார். இந்த தொடக்கவிழாவில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.