புதுடெல்லி,
பீகாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து இருப்பதாகவும், அதனால் மேற்கண்ட 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதி சட்டத்தில் இல்லை. மனுதாரர்கள் உரிமைக் கோர முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
மேலும், எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அதற்கு முன்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு, கருத்துகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆவணங்கள் வழங்க கால அவகாசம் கொடுக்கப்படும், எந்த ஒரு ஆவணமும் வழங்க முடியாமல் இருக்கும் வாக்காளர்களுக்கு உரிய ஆவணங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.” என்றும் தெரிவித்துள்ளது.