பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு: 3-ம் சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் 3-வது சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 87,227 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 92,423 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சிய 92,605 இடங்களுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க ஒரு லட்சத்து 1,589 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில் கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்த 62,533 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 2,096 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அதை இன்று (ஜூலை 11) மாலை 5 மணிக்குள் கட்டாயம் உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

தொடர்ந்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை(ஆகஸ்ட்12) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். அப்வேர்டு (upward) அளித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். அன்றுடன் பொது கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு கலந்தாய்வு இறுதிகட்டத்தை எட்டியநிலையில், மொத்தமுள்ள 1.87 லட்சம் இடங்களில் சுமார் 1.58 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 29 ஆயிரம் இடங்கள்வரை காலியாகியுள்ளன. இவை துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.